ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீசார், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா? என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top