செவ்வாய்க்கிழமை, ஜனவரி 16, 2018
Home > ஆரோக்கியம் > காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு
ஆரோக்கியம்உடல்நலம்மருத்துவ ஆய்வு

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.

தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Keck School of Medicine) பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்களின் ஆய்வுக்கட்டுரை அன்னல்ஸ் ஆஃப் இண்டர்ணல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற மருத்துவ இதழில் ஜூலை 11 -ல் வெளியிடப்படுகிறது.

பல்வேறு மக்களினங்களைச் சார்ந்த, 45 லிருந்து 75 வயதிற்குள்ளான, ஏறத்தாழ 215,000 பேரிடம் நடத்தப் பட்ட இந்த ஆய்வில், உணவுப்பழக்கங்கள், வாழ்க்கைமுறை, குடும்பம் மற்றும் அவர்தம் மருத்துவ வரலாறு குறித்த கேள்வித்தாள்கள் கொடுக்கபட்டு அவற்றிற்கான பதில்களை அதில் குறித்தபின் ஆய்வாளர்கள் அவற்றை  திரும்பப் பெற்றனர். இதுபோல ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும்  கேள்வி-பதில் நிரப்புதல் தொடர்ந்தது. இப்படி நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நபரிடமிருந்து தோராயமாக 16 வருடம்  காலம் பதில்கள் பெறப்பட்டன. இந்த ஆய்வுக் காலத்தில், ஆய்வில் பங்கேற்றவர்களில்  58,397 பேர் இறந்திருந்தனர். அவற்றுள் இதய நோயினால் 36 % -ம் , புற்றுநோயினால் 31 % இறந்தனர்.

காபி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

“காபியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidants), ஃபினோலிக் சேர்மங்களும் (phenolic compounds) இருப்பதால், புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என்று ஆராஅய்ச்சியாளர் செட்டியவான் கூறினார். மேலும்,  “இந்த ஆய்வில் காபியில் உள்ள எந்த இரசாயனங்கள்  “நல்ல விளைவை” உருவாக்குகின்றன என்பதைக் காட்டவில்லையென்றாலும், காபியை ஆரோக்கியமான உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் இணைக்க முடியும் என்பது தெளிவு.” என்றும் கூறினார்.

இதுபோல வேறு சில ஆய்வாளர்கள் காபியினால் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆயினும் சூடான காபி அல்லது வேறு சூடான பானங்களால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகலாம் என உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) ஆய்வாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.  அனால் கடந்த 25 வருடங்களாக காபி சிறுநீர்ப்பை புற்றுநோய் உருவாக்கும் காரணியாக காட்டப்பட்டிருந்தாலும்,  தற்போது உலக சுகாதார நிறுவனம், காபி  கல்லீரல் மற்றும் கருப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆகவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது மிகவும் நல்லதே.

 

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன