வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.அப்போது அண்மைக்காலமாக வடகொரியா விடுத்து வரும் அணு ஆயுத சோதனை மிரட்டல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்படும் சீரற்ற நிலைமை குறித்து விரிவாக விவாதித்தனர்.ஏற்கனவே, அமெரிக்கா- சீனா இடையே அவ்வளவாக நட்புறவு இல்லாத நிலையில் ஹம்பர்க் நகர சந்திப்பு இரு தலைவர்களையும் அமைதிப்படுத்துவதாக இருந்தது.பின்னர், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்றார்.டிரம்பை சந்தித்த பிறகு ஜின்பிங்கும், அமெரிக்காவை பாராட்டி பேசினார்.அவர் கூறும்போது, “அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்துள்ளன. அதேநேரம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் டிரம்பிடம் எடுத்துக் கூறினேன்” என்றார்.