தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரிக்கு என்ன வேலை ?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ததார். இதற்கு பல்வேறு அரசியல் தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.

அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.

முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது.” என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top